சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட 2009 ஜனவரி 9ஆம் திகதிக்கு முதல் நாள், அவரது அலுவலகத்தை மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள் சிலர் கண்காணித்திருக்கும் அதிர்ச்சித் தகவலை புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
தாம் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
மேலும் கொலை இடம்பெற்ற பின் அதை விசாரித்து வந்த கல்கிசை பொலிஸாரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக அன்றி, சாட்சியங்களை அடையாளம் கண்டு அழிக்கவே விசாரணைகளை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் லசந்தவை கொலை செய்ததாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட முன்னாள் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஜயமான்ன, சம்பவம் இடம்பெற்ற திகதியில் கொழும்பிலேயே இருக்கவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.