1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் போயிருந்தனர்.
தமது உறவினர்களை மீட்டு தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், சட்டத்தரணிகளான கு. குருபரன் மற்றும் எஸ். சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ். மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கில் 1ம் எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலான, 2ம் எதிரியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இழஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது எதிரிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு வழக்கறிஞர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதற்கு வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு தமது வாதங்களை முன்வைத்ததுடன், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குளி தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி மா.இழஞ்செழியன் இவ்வழக்கின் முதலாம் எதிரியான குறித்த இராணுவ தளபதி துமிந்த கெப்பிட்டிவெலானவை வரும் நான்காம் மாதம் இரண்டாம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டார்.