இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம்- ஒஸ்டின் பெர்னாண்டோ

228 0

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்த நிபுணத்துவ உரையாடலொன்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க அபேசேகர, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோரும் தேசிய கொள்முதல் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கம் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இலங்கையில் ஊழல் மோசடிகளை ஒழித்து அதன்மூலம் பொருளாதார சமூக, கலாசார, சட்ட மற்றும் சூழல் ரீதியாக பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இச் செயற்திட்டத்தை தயாரிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கமாகும்.

இன்று உலகில் அனைத்து நாடுகளிலும் ஊழலை ஒழித்துக்கட்டுவதன் தேவை உணரப்பட்டுள்ளதுடன், இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு பல்வேறு ஒப்பந்தங்கள், சட்டதிட்டங்கள் மற்றும் பொறிமுறைகள் மாகாண, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் இத்தகைய நிகழ்ச்சித்திட்டத்தின் தேவையை உணர்ந்து ஊழலுக்கெதிராக செயற்படுவதற்கு தேசிய செயற்திட்டத்தை தயாரிப்பதற்கு 2017.10.24 திகதிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இந்த தேசிய செயற்திட்டத்தை உடனடியாக தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதற்கு அரசாங்கத்துறை, தனியார்துறை, சிவில் அமைப்புகள், ஊடகம், மக்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொள்வதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.

இந்த தேசிய செயற்திட்டம் தொடர்பாக நிபுணத்துவ ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளுதல் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இடம்பெற்றதுடன், இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை பலப்படுத்தல், விசாரணை செயன்முறையை பலப்படுத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்கு செயன்முறைகளை பலப்படுத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிப்பது தொடர்பாக எடுக்க வேண்ய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விழிப்புணர்வூட்டுதல் மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊழல் ஒழிப்பில் அரசாங்கத்துறை, தனியார்துறை, சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மக்களினதும் பங்குபற்றுதலின் ஊடாக தேசிய செயற்குழுவொன்றை உருவாக்குவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் இலஞ்சம் மற்றும் ஊழலை
தவிர்ப்பதற்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியார்துறையின் இலஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை தவிர்த்தல், அரச கொள்முதல் மற்றும் நிதி முகாமைத்துவத்தினால் ஏற்படக்கூடிய இலஞ்சம் மற்றும் ஊழலை தடுத்தல். இலஞ்சம் , ஊழல் நிதிச் சலவை உள்ளிட்ட குற்றங்களின் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட வேண்டிய சட்டங்கள்,. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டத்தையும். அதனுடன் தொடர்புடைய வேறு சட்டங்களையும் மறுசீரமைத்தல், ஊழலுக்கெதிராக குரல் கொடுப்பவர்களை பாதுகாத்தல்., தேர்தல்களுக்காக நிதி பயன்படுத்தப்படுவதை வரையறை செய்தல் ஆகியவை தொடர்பிலும் தயாரிக்கப்பட வேண்டிய சட்டதிட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம்
செலுத்தப்பட்டது.

Leave a comment