தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக கழமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள் என்றும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரத்னஜீவன் எச். ஹுலிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி தம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே எனவும் குற்றஞ்ஞாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் இளைங்கலைஞர் மண்படத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வி.மணிவண்ணன் இவ்வாறு தேர்தல் திணைக்கள அதிகாரி பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர்,
“2015 ஆம் ஆண்டும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இன்றும் அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாங்கள் அந்த வழக்கில் போராடிக்கொண்டிருக்கின்றோம். எமக்கு எதிராக பொய்யான வழக்குகள் சோடிக்கப்படுகின்றன. இன்று நாங்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிலே நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மல்லாகம் நீதிமன்றில் எம்மைக் கொண்டுசென்று விட்டுள்ளார்கள்.
இவர்கள் எத்தனை பேரைக்கொண்டு எமது கட்சியின் செயற்பாடுகளை முடக்க நினைத்தாலும் நாங்கள் முடக்கிவிடமாட்மோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். அரசு தன்னுடைய கரங்களைப் பலப்படுத்தி எங்களுடைய கட்சியைக் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கின்றது. யாரோ ஒரு தரப்பு தோற்றுப்போய்விடக்கூடாது என்பதற்காகவே இந்த அரச இயந்திரம் எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது என்றால் இதுவரைகாலமும் வென்றுகொண்டிருந்த ஒரு தரப்பு அரசுக்குத் தேவையான ஒரு தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால்தான் நேற்று நடைபெறவிருந்த முதலமைச்சர் தலமையிலான கூட்டத்துக்குக் கூடு தடை விதிக்கப்பட்டது.
நேற்றய கூட்டத்தால் எந்தக் கட்சிக்கும் பாதிப்போ எந்த கட்சிக்கும் உயர்ச்சியோ வரக்கூடாது என கூறப்பட்டது. நேற்றைய கூட்டத்தால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு என்பதும் எந்தக் கட்சிக்கு உயர்ச்சி என்பதும் உங்களுக்குத் தெரியும். இவ்வாறாக அரச இயந்திரத்தையும் பொலிசாரையும் கொண்டு சட்டத்தை மீறாத எங்களது தேர்தல் பிரச்சாரங்களின் மீது தடையை ஏற்படுத்தி நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களை விட்டு நீதிமன்றங்களிலே காலத்தைச் செலுத்தவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்ற செயற்பாட்டில் அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குவில் அங்கம்வகிக்கின்ற ரத்னஜீவன் ஹுல் என்பவர் இதுவரை முறைப்பாடு செய்த ஒரே கட்சி இலங்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே. எமக்கு எதிரான மூன்று முறைப்பாடுகளை பத்திரிகையாளர் மாநாடு வைத்துத் தெரிவித்திருக்கின்றார்.
இதே ரத்னஜீவன் எச். ஹுல் என்பவரே கொழும்பு பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ் மற்றும் ரெலிக்கிராமில் எமது கட்சியைக் குறிவைத்துத் தாக்கி மோசமான கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எங்களுடைய வேட்பாளர்கள் கைது செய்யப்படவேண்டும் என தாக்கியிருக்கின்றார். எங்கள் மீது சரியான முறையில் வழக்குத் தாக்கல்செய்யவில்லை என பொலிசார்மீதும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
அவர் எழுதிய கட்டுரையில் எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரின் தாயாரையும் வம்பிற்கு இழுத்திருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். அவருடைய முழுநேரப் பணி எங்களுடைய கட்சி என்ன செய்கின்றது அதனை எவ்வாறு தடுக்கவேண்டும் என்பதுதான்.
அவருக்கு இந்தத் தருணத்தில் நாங்கள் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். எங்கள் மீது நீங்கள் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதிவரை நீங்கள் தாக்குதலை நடத்துங்கள். 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள். தயவாகவும் பொறுப்புடனும் இதனைக் கூறிக்கொள்கின்றோம் எங்களை வம்பிற்கு இழுத்தால் நாங்களும் சும்மா விடப்போவதில்லை” – என்றார்.