விவசாயிகளுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் கும்பகோணத்தில் 29-ந்தேதி ஆர்ப்பாட்டம்

229 0

தமிழகம் முழுவதும் நிலவும் உள்ளூர் பிரச்சினைகள், விவசாயப் பிரச்சினைகளுக்காக மாவட்டத் தலைநகரங்களிலும் வருகின்ற 29ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள த.மா.கா.வின் 78 மாவட்டத் தலைநகரங்களிலும் வருகின்ற 29-ந் தேதி (திங்கள்) த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்தும், அந்தந்த ஊர் பகுதியில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தை குறித்தும் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தின் மூலம் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி, ரே‌ஷன் பொருட்கள் வழங்குவதில் உள்ள குறைபாடுகள், மணல் தட்டுப்பாடு, விவசாயப் பிரச்சினை, நெசவாளர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

அது மட்டுமல்ல இப்பிரச்சினைகளுக்கு உரிய சுமூகத் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறோம்.

போராட்டத்தை அந்தந்த மாவட்ட தலைவர் தலைமையில் அந்தந்த மாவட்டப் பகுதியில் உள்ள மூத்த முன்னணித் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட, வட்டார, நகர, கிராம நிர்வாகிகள், துணை அமைப்பினர் என த.மா.கா.வினர் அனைவரும் ஒரு சேர இணைந்து நடத்த இருக்கிறார்கள்.

எனவே தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆர்ப்பாட்டமாக வருகின்ற 29-ந் தேதியன்று நடைபெற இருக்கின்ற த.மா.கா. வின் ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா.வினர் அனைவரும் மக்களின் பேராதரவோடு கலந்து கொண்டு, வெற்றிகரமாக நடத்தி, மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment