உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையின்போது போலீஸ் சுட்டதில் 8 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின்பு கொலை, கொள்ளைகளை தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தவும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
போலீசாருக்கு முழு அதிகாரமும். சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. கொள்ளை கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுராவில் சமீபத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீசார் தேடிய கொள்ளை கும்பல் அருகில் உள்ள மோகன்புரா கிராமத்தில் பதுங்கி இருந்தது. நேற்று போலீசார் அந்த கிராமத்தை முற்றுகையிட்டு சுற்றி வளைத்தனர்.
இதனால் சிக்கிக் கொண்ட கொள்ளையர்கள் போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றனர். போலீசார் அவர்களை திருப்பிச் சுட்டதால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அப்போது சீறிப் பாய்ந்த துப்பாக்கி குண்டு அந்த கிராமத்தில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்த 8 வயது சிறுவன் மாதவ் மீது பாய்ந்தது. குண்டு காயம் அடைந்த அவனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதுபற்றி போலீசார் கூறும் போது நாங்கள் என் கவுண்டர் எதுவும் நடத்தவில்லை, கொள்ளையர்கள்தான் சிறுவர்களை பணயமாக வைத்து எங்களை தாக்கினார்கள் என்றனர்.
சிறுவனின் தாத்தா ஷவ்சங்கர் கூறுகையில், 3 போலீஸ்காரர்கள் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கிராமத்துக்கு வந்தனர். அப்போது கொள்ளையர்கள் கோவில் அருகில் கூடி பேசிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் துப்பாக்கியால் சுட்டனர். என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன் எனது பேரன் குண்டு பாய்ந்து பலியாகினான்.