சென்னையில் குட்கா விற்க லஞ்சம்: போலீஸ் இணை கமி‌ஷனர்கள் 2 பேர் சிக்குகிறார்கள்

284 0

சென்னையில் குட்கா விற்க மேலும் இரண்டு இணைப்போலீஸ் கமி‌ஷனர்கள் ரூ.65 லட்சம் லஞ்சம் வாங்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடையை மீறி குட்கா மிக அதிக அளவில் தங்கு தடையின்றி சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2016-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. குறிப்பாக சென்னை புறநகரான செங்குன்றத்தில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு குட்கா விற்கப்படுவதாக மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து 2016-ம் ஆண்டு மே மாதம் செங்குன்றத்தில் ரகசியமாக இயங்கி வந்த குட்கா குடோன்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குட்கா நிறுவன பங்குதாரர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் என்பவர் வீட்டில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
அந்த டைரியில், சென்னையில் குட்கா விற்பனை செய்வதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரூ. 40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அந்த டைரியை கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் குட்கா விற்பனை பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாதவராவ் “குட்கா லஞ்சம்“ தொடர்பான முழு தகவல்களையும் வாக்கு மூலமாகக் கொடுத்தார். அதைப்பதிவு செய்து கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தகவல் கொடுத்தனர்.
தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் கடிதம் அனுப்பிய வருமான வரித்துறையினர், தமிழக அமைச்சரும், போலீஸ் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை இணைத்திருந்தனர். அதன் அடிப்படையில் லஞ்சம் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் அந்த சமயத்தில் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால், குட்கா லஞ்சம் குறித்த கடிதம் மீது அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2017) ஜூன் மாதம் இந்த விவகாரத்தை இந்து ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியது.
இதுபற்றி விளக்கம் அளித்த தமிழக அரசு, “வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள் காணாமல் போய் விட்டது என்று கூறியது” இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குட்கா விற்க அமைச்சரும், போலீஸ் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே குட்கா லஞ்சம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு பக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளும் இந்த விவகாரம் பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் குட்கா விற்க லஞ்சம் வாங்கியவர்களில் மேலும் இரண்டு இணைப்போலீஸ் கமி‌ஷனர்களுக்கு தொடர்பு இருப்பதை ஆங்கில நாளிதழ் இன்று அம்பலப்படுத்தியுள்ளது. சென்னையில் குட்காவை தங்கு தடையின்றி விற்பனை செய்வதற்கும், செங்குன்றம் குடோன்களில் இருப்பு வைப்பதற்கும் அந்த இரு போலீஸ் கமி‌ஷனர்களும் ரூ.65 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இரு போலீஸ் இணை கமி‌ஷனர்களும், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் ரூ.65 லட்சத்தை லஞ்சமாக வாங்கியுள்ளனர். இந்த லஞ்சத் தொகை எந்தெந்த தேதிகளில் கை மாறியது என்பதற்கான குறிப்புகளும் அந்த ரகசிய டைரியில் இருப்பதாக கூறப்படுகிறது.
போலீஸ் உயர் அதிகாரிகள் தவிர சுங்க வரித்துறை உயர் அதிகாரிகளும் சென்னையில குட்கா விற்க லஞ்சம் வாங்கியதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஒருவருக்கு லஞ்சமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருக்கும் குறிப்பும் ரகசிய டைரியில் இடம் பெற்றுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் குட்கா நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் மூலம் உறுதிபடுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற சமரச திட்டத்தின்படி மாதவராவ் அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
எனவே லஞ்சம் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு குட்கா ஊழல் பற்றி எழுதிய கடிதத்தை வருமான வரித் துறையினர் சமீபத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டில் உள்ள சசிகலா அறையில் இருந்து கைப்பற்றினார்கள்.
இதையடுத்து தமிழக டி.ஜி.பி.க்கு வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் சசிகலா அறைக்குள் எப்படி வந்தது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதோடு குட்கா ஊழலுக்கும் சசிகலாவுக்கும் என்ன தொடர்பு இருந்தது என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் குட்கா விற்பனை செய்யப்படுவது தடுத்து நிறுத்த முடியாதபடி உள்ளது. குட்கா நிறுவனம் சார்பில் போலீசாருக்கு லஞ்சம் வழங்கப்பட்ட தகவல் அம்பலமான பிறகும் அதே பாணியில் குட்கா புகையிலை விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை சென்னையில் ரூ.385 கோடிக்கு குட்கா புகையிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. குட்கா நிறுவன பங்குதாரர் மாதவ்ராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரியில்தான் இந்த தகவல் கிடைத்துள்ளது.
இதுபற்றி மாதவ்ராவ் கூறுகையில், “ரூ.385 கோடி விற்பனையில் குட்கா நிறுவனத்துக்கு நிகர லாபமாக ரூ.188.13 கோடி கிடைத்தது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே வருமான வரித்துறை அதிகாரிகள் அம்பலப்படுத்திய ரூ.40 கோடி லஞ்சம் மீதும் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.40 கோடிக்கும் வரி விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லஞ்சம் கொடுக்கப்பட்ட தொகை செலவின வகையில் வராது என்றாலும் வருமான வரித்துறையினர் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இனி கோர்ட்டு விசாரணைக்கு பிறகு வரும் தீர்ப்பை பொறுத்தே அடுத்த நடவடிக்கைகள் அமையும்.

Leave a comment