சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 09.00 மணி முதல் தொடர் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கூறினார்.
இலங்கை மின்சார சபை தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று பகல் அவர்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ. பி. கணேகலவை தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொலிஸார் தலையிட்டு இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததையடுத்து அங்கு பதற்றநிலை தோன்றியிருந்ததுடன், அப்பகுதியலான போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக ரஞ்சன் ஜயலால் கூறினார்.
எவ்வாறாயினும் இவர்களின் இந்த வேலை நிறுத்தம் குறித்து எதுவித அறிவித்தலும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலட்சன ஜயவர்தன தெரிவித்தார்.