வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனுக்கள் 19 இல் பரிசீலனை

294 0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை சவாலுக் குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 12ஐயும் எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் ஷிரான் குணரத்ன முன்னிலையில் மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுக்களில் கோரப்பட்டுள்ள விடயங்களின் ஒற்றுமைத்தன்மையின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தி பரிசீலனைக்கு எடுப்பதற்கான தினமான மேற்குறிப்பிட்ட திகதி அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் மஹரகம நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுவில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கோரப்பட்டிருந்தமையைவிட குறைவாக இருந்தமையால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் தலைவர் நீதி
யரசர் எல்.டி.பி.தெஹிதெனிய, நீதியரசர் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் கடந்த அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த விடயம் தொடர்பில் சில ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால் அவை அனைத்தையும் நேற்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரிட் மனுக்கள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படும் வரை குறிப்பிட்ட பிரதேசங்களுக்குத் தேர்தல் நடத்த இடைக்காலத் தடைஉத்தரவு பிறப்பிக்குமாறும் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

Leave a comment