ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதுகெலும்பற்றவர். அதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியிலிருந்து விலகாது அக்கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார்.
எனினும் அவர் தற்போது கூட்டு எதிர்க்கட்சியிலுள்ளவர்களுக்கு முதுகெலும்பிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிவிட்டு தமது அரசியலை முன்னெடுக்குமாறு சவால் விடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்ட விதத்தை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் கருஜயசூரிய, தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்ல நெலும்மாத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கவுள்ளாக பேசப்படுகிறது. எனினும் அவ்வாறான சவாலை எதிர்கொள்வதற்கு நாம் எந்த சந்தர்ப்பத்திலும் தயாராகவுள்ளோம். அது குறித்த சட்ட ஆலோசனைகளையும் பெற்றுள்ளோம்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் அம்மோசடியில் ஈடுபட்டவர்கள் எதுவித சலனமுமின்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறானவர்கள் நாட்டையும் பாராளுமன்றத்தையும் கேலிக்கூத்தாக கருதி செயற்படுகின்றனர். எனவே நாட்டை முன்னேற்றும் எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் நிலவிய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை முன்வைத்தார். “விடுதலைப்புலிகள் அமைப்பு உலகளாவிய ரீதியி்ல் பலம் பெற்ற அமைப்பு. எனவே அவ்வியக்கத்துடன் யுத்தம் செய்ய வேண்டாம். பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு” 26 நாடுகள் கூட்டாக இணைந்து வேண்டிக்கொண்டன. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தை முன்னெடுத்து அதில் வெற்றிபெற்றுக்காட்டினார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதுகெலும்பு பற்றி சவால் விடுவாராயின் கடந்த கால சம்பவங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.