அண்மைய மது வர்த்தமானி அறிவிப்புக்கள் ரத்து- அமைச்சரவை இணக்கம்

234 0

நல்லாட்சி அரசாங்கத்தினால் மதுப் பாவனையைத் தூண்டும் விதத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இரு வர்த்தமானிகளையும் இரத்து செய்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மதுபான சாலைகள், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் மதுபான கொள்வனவு, மதுபான விற்பனை மற்றும் அங்கு பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு கடந்த புதன்கிழமை (10) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் மூலம் நீக்கப்பட்டிருந்தது.

அத்துடன், மதுபான சாலைகளை திறக்கும் நேரங்களில் திருத்தம் செய்வது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (11) வெளியிடப்பட்ட மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தல்களை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல்களை நீக்குவதற்கு இன்று (16) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த மதுபான விருப்பு அறிவித்தல்களுக்கு எதிராக நாட்டிலுள்ள பல சமூக தரப்பிலிருந்தும் எதிர்ப்பலைகள் எழுந்திருந்தன. இதனால், ஜனாதிபதியும் பல பொதுக் கூட்டங்களில் கண்டனங்களை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment