கால்வாய் அமைக்க வெட்டப்படும் 1 மரத்துக்கு பதிலாக 20 மரங்களை நட ஐகோர்ட் உத்தரவு

233 0

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதிலாக 20 மரங்களை நட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

திருவள்ளூர் நகராட்சி ஜே.என்.சாலையில் கடந்த ஆண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிக்கு இடையூறாக புளியமரம் ஒன்று இருப்பதால் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து, அந்த புளியமரத்தை அகற்றிவிட்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு இடையூறாக உள்ள புளியமரத்தை அகற்றுவதற்கு அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள 3 பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். புளியமரத்தை அகற்றக்கூடாது என்று கூறுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

எனவே, அந்த புளியமரத்தை அகற்றுவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றப்படும் புளியமரத்திற்கு பதிலாக அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்கு பாதகம் வராத வகையில் 20 மரங்களை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் நட வேண்டும். மரத்தை அகற்றிய 2 மாதங்களுக்குள் கழிவுநீர் கால்வாய் பணியை முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Leave a comment