‘மத விரோத தற்கொலைப்படை தாக்குதல்கள் கூடாது’ – பாகிஸ்தானில் மத குருமார்கள் கட்டளை

240 0

பாகிஸ்தானில் மத அடிப்படையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தக்கூடாது என மத குருமார் கட்டளை பிறப்பித்து உள்ளனர்.

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக மத அடிப்படையிலான போராளிகளால் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த குண்டுவெடிப்புகளில் அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றனர்.

மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்தில்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக போராளிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, பொதுமக்களை கொன்று குவிப்பதை போராளிகள், மிகச்சிறந்த அடிப்படைவாத ஆயுதமாக கருதுகின்றனர்.

இது பொதுமக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை பல்லாயிரகணக்கான அப்பாவி மக்கள் மனித குண்டு வெடிப்புகளால் கொன்று குவிக்கப்பட்டு உள்ள நிலையில், மத அடிப்படையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் (குண்டுவெடிப்புகள்) நடத்தக்கூடாது என மத குருமார் கட்டளை பிறப்பித்து உள்ளனர்.

இப்படி 1,800-க்கும் மேற்பட்ட மதகுருமார் கட்டளை பிறப்பித்து உள்ளதாக பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகம் தயாரித்து உள்ள ஒரு புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன், “ஒரு மிதவாத இஸ்லாமிய சமூகத்துக்கான வலுவான அடிப்படையை இந்த மத கட்டளை வழங்குகிறது. இந்த கட்டளை, இஸ்லாமியத்தின் பொன்னான கொள்கைகளை வைத்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு கட்டாயப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மத குருமார் பிறப்பித்துள்ள இத்தகைய கட்டளை, மத்திய கிழக்கு நாடுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

பாகிஸ்தானிய மத அறிஞர்கள், “எந்தவொரு தனிப்பட்ட நபரோ அல்லது குழுக்களோ புனிதப்போரை பிரகடனம் செய்வதற்கு அதிகாரம் இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர்.

Leave a comment