அமெரிக்காவில் 13 குழந்தைகளை வீட்டுக்குள் பிணைக்கைதிகள் போல அடைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து 95 கி.மீ. தொலைவில் உள்ள நகரம் பெர்ரிஸ். அந்த நகரத்தில் வசித்து வந்தவர்கள், டேவிட் ஆலன் டுர்பின் (வயது 57), லூயிஸ் அன்னா டுர்பின் (49).
இந்த தம்பதியருக்கு 2 வயதில் இருந்து 29 வயது வரையிலான 13 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வெளியுலகத்துக்கு வந்ததே இல்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அந்த தம்பதியரின் 17 வயது மகள், அந்த வீட்டில் இருந்து கடந்த 14-ந் தேதி நைசாக தப்பினார். அவர் அந்த வீட்டில் கிடந்த ஒரு செல்போனை கையில் எடுத்துக்கொண்டு சென்றார். பின்னர் அந்த செல்போனின் மூலம் 911 என்ற அவசர கால அழைப்பு எண்ணை அழைத்துப் பேசினார்.
அப்போது அவர் தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் பெற்றோரால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
அதைத் தொடர்ந்து போலீஸ் படையினர் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி, அவர்களையே உறைய வைத்தது. 12 பிள்ளைகள் ஒரு அறையில் பிணைக்கைதிகள்போல அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு படுக்கையில் சங்கிலியால் பிணைத்து கட்டப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நல்ல உடைகள் கூட வழங்கப்படாமல், அழுக்கான உடைகள் அணிந்து இருந்தனர். அவர்களில் 7 பேர் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் நல்ல சாப்பாடு போடாமல், பட்டினி போட்டு கொடுமை செய்ததால் அவர்கள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி அடையவில்லை.
அவர்கள் அத்தனை பேரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். தங்களை பட்டினி போட்டதாக குழந்தைகள் வேதனையுடன் போலீசாரிடம் தெரிவித்தனர்.
தப்பிய 17 வயது மகள் உள்பட 6 பேர் மொரினோவேலியில் உள்ள ரிவர்சைட் பல்கலைக்கழக மருத்துவமனையிலும், மீதி 7 பேர் கொரோனா பிராந்திய மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டேவிட் ஆலன் டுர்பின், லூயிஸ் அன்னா டுர்பின் தம்பதியரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சித்ரவதை, குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தி, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெற்ற பிள்ளைகளையே பிணைக்கைதிகள் போல பெற்றோரே அடைத்து வைத்து கொடுமை செய்தது, அமெரிக்காவையே உலுக்கி உள்ளது.
சம்பவம் நடந்த வீட்டில் தனியார் பள்ளிக்கூடம் நடத்தப்படுவதாகவும், அதன் முதல்வராக டேவிட் ஆலன் டுர்பின் உள்ளதாகவும் கலிபோர்னியா மாகாண கல்வித்துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது. மேலும், டேவிட் ஆலன் டுர்பின் 2 முறை திவால் ஆனவர் என அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் நல்ல சம்பளத்துடன் என்ஜினீயராக பணியாற்றியதும் தெரியவந்து உள்ளது. எவ்வளவு காலமாக இந்த குழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைக்கு ஆளாகி வந்து உள்ளனர், இதன் பின்னணிதான் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.