டி.டி.வி தினகரன் தலைமையை ஏற்ற நாஞ்சில் சம்பத்துக்கு கட்சி அளித்த இன்னோவா காரை திரும்ப கேட்டதால் அ.தி.மு.க.விடமே காரை ஒப்படைக்க அவர் முடிவெடுத்துள்ளார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியுடன் இன்னோவா கார் ஒன்றையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பின்னர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையை முதலில் சம்பத் ஏற்கவில்லை.
கட்சியில் இருந்து விலகப்போவதாக தெரிவித்த அவர் காரை கட்சியிடம் ஒப்படைக்க போவதாக கூறினார். ஆனால், மறுநாளே அவர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு அளித்ததுடன் காரையும் ஒப்படைக்கவில்லை. தற்போது, கட்சியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கை ஒங்கியுள்ள நிலையில், நாஞ்சில் சம்பத் டி.டி.வி தினகரன் ஆதரவாளராக உள்ளார்.
இதனால், இன்னோவா காரை ஒப்படைக்குமாறு கட்சி கேட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் காரை திரும்ப ஒப்படைக்க நாஞ்சில் சம்பத் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.