பிறமொழி மோகத்தில் சிலர் தமிழை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது என்று திருவள்ளுவர் திருநாள் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பிறமொழி மோகத்தில் சிலர் தமிழை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது என்று திருவள்ளுவர் திருநாள் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்கள் 7 பேருக்கும், சமுதாய தொண்டாற்றிய 2 பேருக்கும் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு முனைவர் கோ.பெரியண்ணனுக்கு திருவள்ளுவர் விருதையும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருதையும், டாக்டர் ஜார்ஜுக்கு அண்ணல் அம்பேத்கர் விருதையும், சுப்பிரமணியனுக்கு அண்ணா விருதையும், தினகரனுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதையும், முனைவர் பாலசுப்பிரமணியனுக்கு மகாகவி பாரதியார் விருதையும், ஜீவபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதையும், எழுத்தாளர் பாலகுமாரனுக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும், முனைவர் மருதநாயகத்துக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் விருதையும் வழங்கி பேசினார்.
அவர் கூறியதாவது:–
இன்றைக்கு சுமார் 40 நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள், அந்தந்த நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. வெளிநாட்டினரும் தமிழ் அறியா பிற மாநிலத்தவர் மற்றும் பிற நாட்டினர் தமிழ் பேசுகிறார்கள், தமிழ் எழுதுகிறார்கள்.
தமிழ் நாட்டிலேயே பிறந்து, தமிழ் நாட்டிலேயே வாழும் சிலர் பிற மொழி மோகத்தில் தமிழை தவிர்ப்பது, வேதனை அளிக்கிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ்மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.
எந்த மதத்தையும் சாராத திருக்குறள் சுமார் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் சுமார் 50 பேர் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். காரணம், உலக சமயத் தலைவர்கள், உலக சான்றோர்கள், அறிஞர்கள் கூறுகின்ற அத்தனை கருத்துகளும், நீதிகளும் ஒரே நூலில் கருத்துக் குவியலாக, நீதி களஞ்சியமாக இருக்கின்றன என்றால் அது திருக்குறளில் மட்டும்தான்.
திருக்குறள் ஒன்றாம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இருக்கிறது. ஆராய்ச்சி பாடத்திலும் இருக்கிறது. வயது வரம்பு இல்லாமல், எல்லோருக்கும், பொதுவான ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் மட்டும் தான். இந்த பெருமை வேறு எந்த நூலுக்கும், எந்த நாட்டிலும் கிடையாது. இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விருது பெற்றவர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பவுன் தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் 50 பேருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை, மருத்துவப்படி ரூ.100 ஆகியவற்றை பெறுவதற்கான அரசாணையை விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-
காவடி சிந்து பாடுவதில் பெரும்புகழ் பெற்றவரான புலவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், ஒரு சிறு குறுநில மன்னரிடம் அவைப்புலவராக இருந்தார். ஒருநாள் வாழ வழியற்ற ஏழை ஒருவன் அவரிடம் வந்து ஐயா, ‘ஒரு ஆடும், ஒரு மூட்டை அரிசியும் வாங்கி கொடுங்கள். எனது குடும்பம் பிழைக்க வழி செய்யுங்கள்’ என்று வேண்டி நின்றான்.
இதைக் கேட்ட ரெட்டியார், ‘நீங்கள் கேட்டதில் ஒன்று நடக்கும், ஒன்று நடக்காது’ என்று சொன்னார். இதைக் கேட்ட அந்த ஏழையின் முகம் வாடி என்ன சொல்வது என்று தெரியாமல், நாம் கேட்டதில் ஒன்று நடக்கும் ஒன்று நடக்காது என்று ரெட்டியார் சொல்கிறாரே என்று திகைத்துப்போய் நின்றார். அப்போது ரெட்டியார் அந்த ஏழையின் முகத்தை பார்த்து கவலைப்படாதீர்கள், நீங்கள் கேட்டதில் ஆடு நடக்கும். அரிசி மூட்டை நடக்காது. இதைத்தான் அப்படி சொன்னேன் என்றாராம்.
இப்படி எது நடக்கும், எது நடக்காது என்று தெரியாத சிலர் புதிய கட்சி தொடங்கி ஜெயலலிதாவின் புகழை அழித்து ஜெயலலிதா ஆட்சியை அகற்றி விடலாம் என்று முயன்று வருகிறார்கள். அவர்கள் கட்சி தொடங்கலாம். தொடங்கினால் நடக்கும். காசு உள்ளவரை அது நடக்கும்.
ஆனால், ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணம் மட்டும் நடக்கவே நடக்காது. தன்னை சுற்றி 10 பேர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நடக்கும். ஆனால், மக்கள் செல்வாக்கை பெற்றுவிடலாம் என்ற எண்ணம் மட்டும் எந்த காலத்திலும் நடக்கவே நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, தங்கமணி, சம்பத், பெஞ்சமின், விஜயபாஸ்கர், நிலோபர்கபில், பாலகிருஷ்ணரெட்டி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயராகவன் நன்றி கூறினார்.