பொது மக்களின் காணி தொடர்பான பிரச்சனையை தீர்க்க அவற்றின் உரிமையை அவர்களுக்கு உறுதி செய்வதற்கு காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைவாக 38 லட்சம் காணிகளை அளவீடும் பணிகளை இவ்வருடத்தில் பூர்த்தி செய்வதற்கு அரச நில அளவையாளர் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் தொழிநுட்பம் மற்றும் அரச மற்றும் தனியார் துறையினரின் நில அளவை திணைக்களத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிலஅளவையாளர் பி. என்.பி உதய காந்த தெரிவித்துள்ளார்.
நவீன நில அளவீடு உபகரணம் மற்றும் செய்மதி தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த அளவீடு நடவடிக்கை இடம் பெறுகின்றது. இதற்காக 41 ஜீபிஸ் தொழிநுட்ப கோபுரங்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்படவுள்ளன.
இவற்றில் 6 கோபுரங்கள் கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, கட்டான, அவிசாவளை ஆகிய பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல்மாகாணத்தில் 25லட்சம் காணியும் நாட்டின் ஏனைய மாகாணங்களில் 11லட்சம் காணிகளும் அளவிடப்படவுள்ளன.
இதன் முன்னோடி திட்டமாக காலி மாவட்டத்தில் எல்ப்பிடி பிரதேசத்தில் அளவீடு நடவடிக்கைகள் பெப்வரி மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 36 லட்சம் காணிகளையும் நில அளவை திணைக்களத்தினால் மாத்திரம் அளவிடப்படுமாயின் அதற்க 30 வருடத்திற்கு மேற்பட்ட காலம் செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்தப்பணி ஒரு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று நிலஅளவையாளர் பி. என்.பி உதய காந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.