கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் உள்ளதாகவும், அவருக்கு இந்தக் கடத்தலில் நேரடி தொடர்புள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது எனவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் அக் காலப் பகுதியில் திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றியதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கோட்டை – நீதவான் லங்கா ஜெயரத்ன சந்தேகநபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.