இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை தடை செய்யும் செயற்பாடு கருத்துச் சுதந்திரத்தை மீறுகின்ற செயலாகும்!

251 0

இடைக்கால அறிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் பகிரங்க விவாதம் நடத்தினால் ஒரு கட்சிக்கு சார்பானதாகவும் இன்றுமொரு கட்சிக்கு பாதகமாகவும் அமைந்து விடலாம் என்ற தேர்தல் ஆணைக்குழுவின் காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று யாழ். பல்கலைக்கழக சட்டபீட தலைவர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதியரங்கில் இடம்பெற விருந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தை யாழ்.பல்கலையில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவித்திருந்தது.

குறித்த தடை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “வடக்கு – கிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் முத்துக்கமாரசாமி சொர்ணராஜாவும், “இடைக்கால அறிக்கையின் மாயைகள் கட்டுடைத்தல”; என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரும், சிரேஸ்ர விரிவுரையாளருமாக குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கருத்துரைகளை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வினை யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலை அரங்கில் நடத்துவதற்கான அனுமதிகள் பெறப்பட்டு, அந் நிகழ்விற்கான அழைப்பிதல்களும் சகல தரப்பினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்வை கைலாச பதியரங்கில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவித்து அதற்காக விளக்கத்தையும் அனுப்பியிருந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விளக்கக் கடிதத்தில் இடைக்கால அறிக்கை விவாதிக்கப்பட்டால், ஒரு கட்சிக்கு சார்பானதாகவும் மற்றைய கட்சிக்கு எதிரானதாக இருக்கும் என்றும் இடைக்கால அறிக்கையை பகிரங்கமாக விவாதிப்பது சில கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு குந்தகமாக அமையலாம் எனவும் அரச வளங்கள் பயன்படுத்துவது போன்ற குற்றச் சாட்டுக்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றின் அடிப்படையில் குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி அரங்கில் குறித் கருத்தரங்கை நடத்துவதற்கு தடைவிதித்துள்ளது.

இந் நடவடிக்கையானது தேர்தல்கள் சட்டத்துக்கு பிழையான விளக்கங்களை கொடுத்து இவ்வாறான மக்கள் மத்தியிலான விவாதங்களை தடைசெய்வது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை மீறுகின்ற செயற்பாடாகும்.
புதிய அரசியல் திருத்தம் தொடர்பாக அரசியல் வாதிகள் விவாதிக்க முடியும் என்றால் ஏன் கல்வியியலாளர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் சிவில் சமூகத்தினரும் விவாதிக்க முடியாது என்ற கேள்வி நியாயமானது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இச் செயற்பாடு எந்த விதத்திலும் பொருத்தமானதாக அமையாது.

நிகழ்வைத் தடைசெய்வதற்கு அரச வளங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் சிவலில் சமூகத்தின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக அரசியல் சாயம் பூசி அக்கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக குறித்த ஒரு கட்சியால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஜனநாயக விரோதமானது எனத் தெரிவித்தார்.

Leave a comment