யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் தடையை நீக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழகத்தின் கலை பீட முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் இன்று முதல் வகுப்பு பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் காரணமாக நால்வர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து குறித்த மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த மோதல் தொடர்பில் கடந்த 15ம் திகதி ஒழுக்க விசாரணை நடைபெற்றிருந்த வேளையில் காயமடைந்த நான்கு மாணவர்களில் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதின் காரணமாக விசாரணைகளை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் தீர்மானித்தனர்.
குறித்த தீர்மானமானது வகுப்புத்தடையிலிருக்கும் மாணவர்களுக்கு அசாதாரணமானது என தெரிவித்தே முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்களையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்படி ஏனைய மாணவர்களும் குறித்த வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடும் பட்சத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முழுமையாக மூடும் நிலைக்கு உள்ளாகும் என பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.