கடந்த 10ம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என தெரியவந்துள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அன்றையதினம், பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப திட்டமிடப்பட்டிருந்ததாக, இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என, பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அலுவலகத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் பிரதி சபைக்கு கிடைக்கப் பெறவில்லை என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரியப்படுத்திய பின்னர், தினேஸ் குணவர்த்த, அடிக்கடி அந்த அறிக்கையை வழங்குவதாக வாக்குறுதி அளிக்குமாறு கூறி, பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பும் வகையில் செயற்பட்டதாக, மேற்கண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட அறிக்கை ஜனவரி 17ம் திகதி வழங்கப்படும் என, ஜனாதிபதியின் செயலாளரால் அறிவிக்கப்பட்ட நிலையில், தினேஸ் குணவர்த்த உள்ளிட்ட சிலரின் தூண்டுதலின் பெயரில், முற் கூட்டியே திட்டமிட்ட படி, பிரதமரின் உரைக்கு பாதிப்பை ஏற்படுத்தி பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப முற்பட்டதாக, சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பதற்ற நிலையை அடிப்படையாகக் கொண்டு, சமூக வலைத் தலங்களில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் வௌியிடப்படுகின்றமை தொடர்பில் தாம் கவலையடைவதாகவும், அந்த அலுவலகத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது