அதிகாரத்தைக் கைவிடுவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசினாலும், அந்த அதிகாரத்தை தக்கவைக்கும் வகையிலேயே செயற்பாடுகள் அமைந்திருப்பதாக ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி முறையை ஒழிக்கின்றேன் எனக் கூறிக் கொண்டு அதிகாரத்துக்கு வந்தவர், ஆட்சியின் நடுவில் தனது பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா எனக் கோரியிருப்பது முன்னுக்குபின் முரணாக உள்ளது.
உச்சநீதிமன்றம் நடுநிலையாக இருந்து ஐந்து வருடங்கள் எனக் கூறியிருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருந்தபோதும் அவர் தனது பதவிக்காலம் குறித்துக் கேள்வியெழுப்பியிருக்கும் காலம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதவிக்காலம் தொடர்பில் சந்தேகம் இருந்திருந்தால் 19ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் நீதிமன்றத்திடம் கோரியிருக்க வேண்டும். இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் எனது பதவிக்காலத்துக்கு என்ன நடக்கும் என்பதை. ஐந்து வருடங்கள் முடிவடைந்த பின்னர் கேட்டிருக்கலாம்.
இதனைவிடுத்து, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் கோரி, மேலும் ஒருவருடத்துக்கு பதவியில் இருக்க முடியும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் தமக்கான பலமாக அதனைக் காண்பிக்க முடியும்.
கட்சியின் தலைமைத்துவத்தை தம்மிடமே வைத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே இதனைப் பார்க்கவேண்டியிருப்பதாகவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.