புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமாயின் இந்த தேசிய அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம் எனவும் இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கின. இதன் மூலமாகத்தான் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகவிருந்தது. எனவே எது நடந்தாலும் தேசிய அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.