ரஜினியின் கொள்கை எங்கள் கொள்கையோடு ஒத்துப்போவதால் கூட்டணி பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்று தமிழிசை கூறினார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மாலை அணி வித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது குருமூர்த்தி அவர்களின் கருத்து. ஒரு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என்ற வகையில் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
எங்களை பொறுத்தவரை இரண்டு கழகங்களும் இல்லாத ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவேதான் இரு கழகங்களும் இல்லாமல் தேர்தலை சந்தித்து வருகிறோம். எனவே எங்கள் முன்னால் இருக்கும் சவால். கட்சியை பலப்படுத்துவதுதான். அதில் தான் இப்போது ஈடுபட் டுள்ளோம்.
ஊழலற்ற ஆட்சி வேண்டும். மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் கொள்கை. ரஜினியின் கொள்கையும் எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகிறது. கொள்கை ஒன்றுபட்டாலும் அரசியலில் இணைந்து செயல்படுவது வேறு.
அவர் இப்போதுதான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து இருக்கிறார். இனி கட்சி தொடங்கி அவரது செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அவரது அரசியல் பயணம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
எனவே கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அது தேர்தல் நேரத்தில் கட்சியை பலப்படுத்த ஒவ்வொரு கட்சியும் அமைக்கும் வியூகத்தை பொறுத்து அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குருமூர்த்தியின் கருத்து குறித்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும் போது, ‘ரஜினியுடன் பா. ஜனதா இணைந்து செயல்பட வேண்டும் என்று குருமூர்த்தி கூறி இருக்கிறார். இதை பரிசீலனை செய்வோம். கட்சி இது பற்றி முடிவு செய்யும்’ என்று கூறினார்.