ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 38 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈராக் நாட்டில் பல பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். மொசூல் உள்பட பல நகரங்கள் அவர்களின் பிடியில் இருந்தது. ஆனால் ஈராக் ராணுவம் பல மாதங்களாக முற்றுகையிட்டு மொசூல் நகரை கடந்த ஆண்டு மீண்டும் கைப்பற்றின. இதேபோல் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சிறுசிறு நகரங்களும் கூட மீட்கப்பட்டன.
கடந்த மாதம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டு விட்டன என்று ஈராக் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெற்றிக் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டது.
என்றபோதிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலை ஈராக் ராணுவத்தால் இன்னும் முழுமையாக தடுக்க இயலவில்லை.
பயங்கரவாதிகள் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊடுருவி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக் தலைநகரான பாக்தாத்தில் நேற்று காலை 2 இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர்.
பாக்தாத் நகரின் வர்த்தக பகுதியான ஏவியேஷன் சதுக்கத்திற்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருந்த 2 பயங்கரவாதிகள் அதை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த வெவ்வேறு பகுதிகளில் வெடிக்கச் செய்தனர்.
அப்போது அங்கே கூடியிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதலில் 16 பேர் பலியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது, 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் உடல் சிதறி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கூடுதல் ராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இதில், பலத்த காயம் அடைந்தவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலை ஈராக் சுகாதார துறை மந்திரியும் உறுதி செய்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத் நகரின் முசாயிப் பகுதியில் தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் பயங்கரவாதிகள் இந்த இரட்டைத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.