இந்தோனேசியா நாட்டின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலக கட்டிடத்தின் முதல்தளம் இன்று இடிந்து விழுந்த விபத்தில் 75 பேர் காயமடைந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் சுதிர்மன் மாவட்டத்தில் அந்நாட்டின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலகம் இயங்கி வருகிறது. 1995-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முதல் தளம் இன்று இடிந்து கீழ்தளத்தில் உள்ள வரவேற்பரை பகுதியின் மீது விழுந்தது.
கண்ணாடி துண்டுகள் மற்றும் இரும்பு கம்பிகள் சிமெண்ட் கான்கிரீட்டுடன் பெயர்ந்து கீழே விழுந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் இருந்து பலரை மீட்டு அருகாமையில் புல்தரை பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இந்த விபத்தில் 75 பேர் காயமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2000-ம் ஆண்டு இதே கட்டிட வளாகத்தில் நிகழ்ந்த கார்குண்டு தாக்குதலில் பத்துபேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.