பொறுப்புக்கூறல் விடயத்திலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தருவதாக அமெரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக் ஷவின் கதைகளை கூறி வாக்குறுதிகளை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொறுப்புக்கூறல் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத் தம் கொடுக்க வேண்டும் என விக்கினேஸ்வரனும் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்தும், உலக உணவு ஸ்தாபனம் இலங்கைக்கான உதவியினை நிறுத்தியுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடும் வகையில் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பை சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து முதல்வரிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்தும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது குறித்து நான் அவரிடம் கருத்து வினவியிருந்தேன். உண்மையில் எமக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே இன்று பொய்த்துக்கொண்டு உள்ளன. ஆகவே அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என நான் தெரிவித்துள்ளேன். அதே நிலையில் அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களில் பின்வாங்குகின்றது. எமக்கு இது மிகுந்த அதிருப்தியை வெளிபடுத்துவதாக அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் என்னிடம் தெரிவித்தார்,
இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் அரசாங்கம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என வாக்குறுதி வழங்கியிருந்தும் அவை இன்றும் வெறும் கதைகளாக கடந்து செல்கின்றன. இப்போது தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ள நிலையில் பொறுப்புக்கூறல் விவகாரம் மேலும் தாமதமாகும். சில முக்கிய விடயங்களில் தேசிய அரசாங்கம் பின் நிற்பது உகந்ததல்ல. ஜனநாயக ரீதியில் அரசாங்கம் செயற்படும் என்ற நம்பிக்கைக்கு அமையவே ஐக்கிய அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவும் பின்னின்று உதவி செய்யவும் தீர்மானம் எடுத்தது.
அதேபோன்று இந்த அரசாங்கம் தாமாக முன்வந்து பல்வேறு விடயங்களில் தீர்வுகளை கொடுப்பதாக கூறியிருந்தது. எனினும் அனைத்துமே இன்று ஏமாற்றுக் கதைகளாக மாறியுள்ளன. ஆகவே தாம் எதிர்பார்த்த எவையும் இன்னும் நடைபெறவில்லை என அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தார். மேலும் இந்த அரசாங்கத்தின் நகர்வுகளில் திருப்திகரமான செயற்பாடுகள் இல்லை. முன்னைய ஆட்சியின் கதைகளை கூறிக்கொண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கதைகளை கூறிக்கொண்டும் முன்னெடுக்கவேண்டிய நல்லெண்ண நகர்வுகளை புறக்கணித்து வருகின்றனர். தமது கடமைகளை நிராகரிக்கும் செயற்பாடுகளாக நாம் இவற்றை கருதுகின்றோம். இதுவே எமக்குள்ள மிகப்பெரிய ஏமாற்றமாகும். ஆகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் என்னிடம் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய அமெரிக்காவின் புதிய பாதீடுகளுக்கு அமைய உலக உணவு ஸ்தாபனம் இலங்கையின் சிறார்களுக்கு ஒதுக்கும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக்கான நிதி உதவியை இந்த ஆண்டில் ஒதுக்கவில்லை. கடந்த மாதத்துடன் அவை முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த செயற்பாடு எமது மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது. எமது பிள்ளைகள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் பாடசாலையில் வழங்கும் உணவுகளை நம்பி பாடசாலைகளுக்கு செல்கின்றனர். அரைவாசி பிள்ளைகளின் நிலைமை இவ்வாறாகவே உள்ளது. ஆகவே மதிய உணவு திட்டமும் கைவிடப்பட்டால் எமது பிள்ளைகள் பாடசாலை செல்வதும் வெகுவாக குறைந்துவிடும். இதனால் எமது சமூகத்தின் பிரச்சினைகள் அதிகரிக்கும். ஆகவே நான் இந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த மாதம் அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். இந்த விவகாரங்கள் குறித்து நேற்றைய சந்திப்பில் நான் அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப்பிடம் வினவினேன். எனது கடித்தத்தை உரிய இடத்திற்கு அனுப்பியதாகவும் எனது கடித்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கடிதத்தை ஏற்றுகொண்ட போதிலும் 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் இந்த விவகாரத்தில் தாம் சற்று சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே எமக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தருகின்றது. மாதாமாதம் ஏதேனும் வேலைத்திட்டங்கள் ஊடாக எமது மாணவர்களுக்கு உணவுக்கான நிதியினை வழங்க வாய்ப்புகள் உள்ளதா எனவும் நான் வினவினேன். எனினும் தீர்மானங்கள் எதையும் அவர்களால் முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது. ஆகவே மாகாணசபையில் இந்த விவகாரம் குறித்து நான் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். வரும் பிரச்சினைகளையும் நானே சமாளிக்கவும் வேண்டியுள்ளது. இவ்வாறான நகர்வுகளின் மூலமாக எமது மாணவர்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டர்.