உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான உள்ளூர் அதிகார சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுமாகவிருந்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கிக் காட்டுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அளகப் பெரும தெரிவித்தார்.
மாத்தறை உயன்வத்தையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லையென்றும் அது உள்ளூர் அதிகார சபைகளின் அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் மாத்திரம் எனவும் அரசாங்கம் தெரிவித்து வருகிறது. எனினும் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மிகவும் தீர்க்கமானதாக அமையவுள்ளது.
நாடு பூராகவும் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் 274 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. எனவே அம்மன்றங்களின் அதிகாரத்தை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு செய்தால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்றதுபோல் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் அமர்த்துவோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமாக்கிய பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் சரிவைச் சந்தித்துள்ள நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை துரிக கதியில் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.