திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் சாரதிக்கு பதிலாக வேறு ஒருவர் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்த நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று (14) உத்தரவிட்டார்.
கல்மெட்டியாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா தம்பலகாமத்தில் வெள்ளிக்கிழமை (12) காலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கிண்ணியாவிலிருந்து தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸானது சைக்களில் சென்றுக்கொண்டிருந்த ஒருவர் மீது மோதியுள்ளது.
இந்த நிலையில் சாரதியை கிண்ணியா பொலிஸிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சாரதிக்கு பதிலாக வேறு ஒருவர் சமூகமளித்த போது பொலிஸார் அவரை கைது செய்து, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.