பெருநாட்டில் நேற்று காலை பசிபிக் கடற்கரையில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 65 பேர் காயம் அடைந்தனர்.
தென்அமெரிக்காவில் பெரு நாடு உள்ளது. நேற்று காலை 4.18 மணியளவில் அங்கு தென்கிழக்கு பசிபிக் கடற்கரையில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் ஆர்கொஸ்பா, ஐகா மற்றும் அயாகுஜோ பகுதிகள் அதிர்ந்தன. இங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் என்னமோ ஏதோ என அஞ்சி நடுங்கி வீட்டை விட்டு வெளியேறி ரோட்டில் ஓட்டம் பிடித்தனர்.
அங்கு 7.3 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. அகாரி என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 40 கி.மீட் டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில நடுக்கம் காரணமாக ஆர்கொஸ்பா, ஐகா மற்றும் அயாகுஜோ மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆர்கொஸ்பாவில் யாயுகா நகரில் மலையில் இருந்து பாறைகள் உருண்டன. அதில் சிக்கி ஒருவர் பலியானார்.
இங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. வீடுகள் இடிந்தன. ரோடுகள் பிளந்து பலத்த சேதம் அடைந்தன. இதனால் நகர் பகுதியில் இருந்து கிராம புறங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கிடக்கின்றனர். மீட்பு பணியில் ராணுவம், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடபட்டுள்ளனர். இதுவரை 65 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
மீட்பு பணியை தீவிரப்படுத்த அதிபர் பெட்ரோ பாப்லோ குஷைன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்கொஸ்பா மாகாண கவர்னர் யமீலா ஓசாரியோ மேற்பார்வையில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்கள் மற்றும் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக கடல் அலைகள் வழக்கத்தை விட மிக அதிக உயரத்துக்கு எழும்பின. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோரத்தில் தங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அண்டை நாடான சிலியிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது