ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுபவர்கள் குறித்த கருத்து தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்து எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து பேசினார். மேலும் எல்சால்வேடர், ஹோண்டுராஸ் மற்றும் ஹைதி நாட்டில் இருந்து வந்து வெளியேறியவர்களையும் குறிப்பிட்டார்.
அருவருக்கத்தக்க நாடுகளை சேர்ந்தவர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக நார்வேயில் இருந்து இங்கு வந்து குடியேறுபவர்களை ஆதரிக்கலாமே என்றார். மேலும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களால் நமது நாட்டுக்கு எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று பேசினார். இந்த அவதூறு பேச்சுக்கு ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஆப்பிரிக்க நாடுகள் மீது டிரம்ப் தனது இனவெறியை காட்டியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு டிரம்ப் மறுத்து விட்டார். தான் உள் நோக்கத்துடன் பேசவில்லை என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று ‘மேற்கு பால்ம் பீச்‘ பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்பில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது நான் இன வெறியன் அல்ல. நீங்கள் என்னை பேட்டி காணும் போதெல்லாம் ஒரு போதும் சிறிதளவு கூட இன வெறியுடன் நடந்து கொண்டதில்லை என்றார்.
ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாட்டினர் மீது டிரம்ப் கூறிய கருத்து அவரது ஆளும் குடியரசு மற்றும் எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்களிடையே எதிர்ப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது, பாராளுமன்ற சபாநாயகர் பால் ரியான் கூறும் போது அதிபர் டிரம்பின் வெளிநாட்டினர் குறித்த குடியேற்ற கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. உதவிகரமற்றது. எதற்கும் பயன்படாது என கருத்து கூறியுள்ளார்.
இத்தகைய எதிர்ப்பை தொடர்ந்து டிரம்ப் தனது மவுனம் கலைத்து பதில் தெரிவித்துள்ளார்.