இந்தியாவில் முதல் முறையாக 133 அடி திருவள்ளுவர் முழுஉருவ மணல் சிற்பம் மகாபலிபுரம் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கினர்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் மறுநாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது முழு உருவ மணல் சிற்பத்தை உருவாக்க அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர்.
இதையொட்டி 25-க்கும் மேற்பட்ட சிற்பக் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக இந்த பிரமாண்ட சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் தமிழ் சங்கத்தினர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.
ஒரிசா கடற்கரை தான் மணல் சிற்பத்துக்கு புகழ் பெற்றது. அங்கு அப்துல் கலாம், திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மார்பளவில் உருவாக்கப்பட்டது.
ஆனால் மாமல்லபுரத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களையும் நினைவுப்படுத்தும் வகையிலும் கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சிலையை நினைவுப்படுத்தும் வகையிலும் அதேபோல் 133 அடியில் முழு உருவ சிலையை உருவாக்க முடிவு செய்தனர்.
4 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் கடல் மண் சுமார் 45 அடி உயரத்துக்கு குவிக்கப்பட்டது.
மேல்பகுதியில் தலையை உருவாக்கி சாய்ந்த நிலையில் 10 அடி உயர பீடத்தின் மீது 133 அடி உயர சிலையை உருவாக்கி உள்ளார்கள்.
இந்த மாதிரி முழு உருவ பிரமாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றனர்.
இந்த மணல் சிற்பத்தை ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொங்கலை யொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த பொதுமக்களும் கண்டுகளித்தனர்.
இதுபற்றி மல்லை தமிழ் சங்க தலைவர் மல்லை சத்யா, செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது:-
திருவள்ளுவரின் 2049-வது பிறந்த நாளை யொட்டி உலக பொதுமறையான திருக்குறளை உலக மக்கள் உணரவும், திருவள்ளுவரை அறிந்து கொள்ள செய்யவும் இந்த முயற்சியை மேற்கொண்டோம். கல்லெல்லாம் சிலை வடித்து தமிழனின் பெருமையை நிலைநாட்டிய பல்லவ ராஜாக்களின் மாமல்லபுரம் கடற்மணலில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இதை செய்துள்ளோம் என்றனர்.