திருச்சி அருகே பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

13988 111

திருச்சி மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக பிரசித்திபெற்ற பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக மொத்தம் 500 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், சூரியூர் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் புதிதாக நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள கிராமங்களுக்கு, ஆய்வு செய்யப்பட்டு அரசின் அனுமதிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படியும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பாதுகாப்பான முறையில் நடத்தப்படுகிறது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக பிரசித்திபெற்ற பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக மொத்தம் 500 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு மருத்துவத்துறை சார்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகளும் வழங்கப்பட்டது. ஒரு குழுவினர் குறைந்தபட்சம் 1.30 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கின. இதனை ப.குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத் துறையினரின் ஆய்விற்கு பிறகு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டன. மற்ற காளைகள் தகுதி நீக்கம் செய்து வெளியேற்றப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் காளைகள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் பாதுகாப்பாக காளையின் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம முக்கியஸ்தர்கள் அரசின் விதிமுறைகளுக்கும், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கும் ஏற்ப நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் முதன்முதலாக கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு போட்டியில் பங்கேற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் திமில்களை பிடித்து அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியை ஏராளமான வெளிநாட்டினரும் பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு தனி கேலரியில் அமர்ந்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Leave a comment