பதுளையிலுள்ள தமிழ் பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை, முழந்தாழிட வைத்ததாக, ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கூறிய கருத்தின் காரணமாக தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி அவருக்கு எதிராக பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாக சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவி ஒருவரை, பாடசாலையில் சேர்த்துக் கொள்வதற்கு முதலமைச்சர் வழங்கிய கடிதத்தை நிராகரித்த அதிபரை, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து, முழங்காலில் இருக்க வைத்து வைத்து மன்னிப்புக் கோர வைத்ததாக ஊவா மாகாண முதலமைச்சர் மீது சமந்த வித்யாரத்ன குற்றம் சுமத்தியிருந்தார்.
எவ்வாறாயினும் அது பொய்க்குற்றச்சாட்டு என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தனக்கும் தனது குடும்பத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சாமர சம்பத் தசநாயக்க, இதனால் தனது தேர்தல் நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.(ச)
இதனால் வழக்கு தொடரவுள்ள அவர், இது தொடர்பாக பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரதியொன்றை இன்று அவர் பெற்றுக் கொண்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.