தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை வாசகத்தின் வழியே 2018 தை பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடிய வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உன்னத இலட்சியத்தை உலகத் தமிழர் உள்ளமெங்கும் விதைத்து தமிழ்ப் புத்தாண்டை வருக வருக என வரவேற்போம்.
அனைவருக்கும் தைப் பொங்கல் நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் பேருவகை கொள்கிறேன் என வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது;
விடைபெற்றுச் செல்லும் ஆண்டோடு தமிழர்களாகிய நாம் அனுபவித்து வரும் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் என யாவும் எம்மை விட்டு அகல வேண்டும்
புலர்கின்ற புதிய ஆண்டில், சுதந்திரமான, சுபீட்சமான நல்வாழ்வு மலரட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் நற்சிந்தனையுடனும் அடியெடுத்து வைப்போம்.
“விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்து எடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.
சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வழியே எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்காய் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சாத்வீகமான முறையில் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என இன்றைய நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.