அமெரிக்காவில் ஷெரீன் மேத்யூஸ் என்ற இந்திய சிறுமி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லி மேத்யூஸ். இவரது மனைவி சினி மேத்யூஸ். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ரிச்சர்ட்சன் நகரில் வசித்து வருகிறார்கள். சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்கள் கடந்த ஆண்டு இந்தியா வந்த போது ஒரு ஆசிரமத்தில் இருந்து 3 வயது சிறுமி ஒன்றை தத்தெடுத்தனர். அந்த குழந்தையையும் அவர்கள் அமெரிக்கா அழைத்து சென்றனர். இக்குழந்தைக்கு அவர்கள் ஷெரின் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இரவு இக்குழந்தை திடீரென மாயமாகிவிட்டதாக குழந்தையின் வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூஸ், ரிச்சர்ட்சன் போலீசில் புகார் செய்தார்.
அதில் குழந்தை இரவில் பால் குடிக்க மறுத்ததால் அதனை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தையை காணவில்லை என்று புகாரில் கூறியிருந்தார். இப்புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரிச்சர்ட்சன் போலீசார், குழந்தையை கொடுமை செய்ததாக வெஸ்லி மேத்யூஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் அபராதம் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார்.
அதே நேரம் அவரது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக அவரது வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த நேரத்தில் வெஸ்லி மேத்யூஸ் வீட்டில் இருந்த ஒரு கார் புறப்பட்டு செல்வதும், ஒரு மணி நேரத்தில் அந்த கார் திரும்பி வந்த காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதன்மூலம் சிறுமி மாயமான விவகாரத்தில் அதன் வளர்ப்பு தந்தை மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்தது.
சில தினங்களுக்கு பின்னர் வெஸ்லியின் வீட்டில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள ஒரு கால்வாயில் சிறுமி ஒருவரின் பிணம் மீட்கப்பட்டது. அந்த பிணம் மாயமான இந்திய சிறுமி ஷெரின் மேத்யூவின் சடலம் என்பது உறுதிசெய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, வளர்ப்பு தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூஸ் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர் மனைவி சினி மேத்யூஸ் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை பாதுகாக்காமல் கைவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், இவருக்கு 2 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.