சென்னையில் போகியால் காற்று மாசு அதிகரித்துள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

283 0

சென்னையில் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தன் காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்
தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள்.
நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய அளவில் மாசடைகிறது. குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களை சாலையில் வைத்து தீயிட்டு கொளுத்தி வருவதால் நகர் முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் கூறுகையில், போகி பண்டிகையால் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். அதிகப்பட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றை சுவாசிக்கும் போது நுண்துகள்களின் அளவு 386-ஆக இருந்தது. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. குறைவான வெப்பநிலை, குறைந்த காற்றின் வேகத்தால் காற்றில் நுண்துகள்கள் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்தன என்று வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் போகிப்பண்டிகையை கொண்டாடுவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.

Leave a comment