போர்த்துகல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்தனர்.
போர்த்துகல் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் வில்லா நோவா டா ரெயின்ஹா நகரில் உள்ள ஒரு இரண்டு மாடி ஓய்வு விடுதியில் வாரவிடுமுறை களிக்க பொதுமக்கள் கூடினர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இதன்காரணமாக அப்பகுதியில் கூட்டநேரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநேரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு போர்த்துகலில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.