மறக்கப்பட்ட விவகாரம்;ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்

300 0

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ், பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டார்கள். விடுதலைப்புpகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை புரிந்தார்கள் அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும், அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களும்கூட படையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கங்கள்,அந்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தன. அதனால், அந்தப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்பட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டார்களே தவிர, அவர்கள் அரசியல் கைதிகளாக நோக்கப்படவில்லை.

முன்னைய அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோது, அரசுக்கு பல முன்னாள் போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தைப் பயன்படுத்தி புனர்வாழ்வுப் பயிற்சியளித்த அரசு அவர்களை விடுதலை செய்து, சமூக வாழ்க்கையில் இணையச் செய்திருந்தது.

அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி நேரடியாகப் போராடிய இந்த இளைஞர் யுவதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ததாக அரச தரப்பினர் பெருமையடித்துக் கொள்கின்றார்கள். ஆனால், படையினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு, அரசு பொது மன்னிப்பு வழங்கவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 11 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தமை அரசாங்கத்தின் மனிதாபிமானம் அல்லது நல்லிணக்கத்தின் அடையாளம் என்றால், பல வருடங்களாக உரிய விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் வதைபடுகின்ற அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சிபுரியும் அரசாங்கத்தினால் ஏன் அந்த மனிதாபிமானத்தை அல்லது நல்லிணக்கத்தைக் காட்ட முடியவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிவாகை சூடியபோதிலும், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்ததாகக் குற்றம் சுமத்தி, முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக கத்தியின்றி சத்தமின்றி ஒரு ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து வெற்றி பெற்ற இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னரும், பதவிக்கு வந்த பின்னரும் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாக பல தடவைகளில் உறுதியளி;த்திருந்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநத உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று சிறைச்சாலைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளும் அவர்களுடைய உறவினர்களும் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமைச் செய்ற்பாட்டாளர்களும்கூட குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் அவர்கள் விடுத்த கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாறியிருக்கின்றது.

இப்போதைய நிலைமை என்ன?

தமிழ் அரசியல் கைதிகள் வருடந்தோறும் பொங்கல் தினத்தன்று பொங்கல் பொங்கி இறை வணக்கம் செய்து தங்களுடைய விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்வது வழக்கம். அதனையொட்டி இந்த வருடமும் பொங்கலுக்கு அவசியமான பொருட்களைப் பெற்றுத் தருமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனை நிறைவேற்றுவதற்காக அவர் வியாழக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அரசியல் கைதிகள், தற்போதைய தமது நிலைமைகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர். அவற்றில் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கத்தக்க விடயங்களும் இருப்பதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வெலிக்கடையில் உள்ள அரசியல் கைதிகளின் தகவல்களுக்கமைய நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலும் 130 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும் இது அதிகாரபூர்வமான தகவலா என்பது தெரியவில்லை. வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரம் 78 அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்தவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரணை செய்யும் நீதிமன்றங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை வழக்கு விசாரணைகள் நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என அரசியல் கைதிகள் கூறுகின்றனர். வழக்குகள் குறைந்தது ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒரு தடவையே விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய சந்தர்ப்பங்களிலும், வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் விசாரணைகள் ஒத்தி வைக்கப்படுவதிலேயே அதிக அக்கறை செலுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதிகள் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் தண்டனை பெற்றவர்களைப் போன்று நீண்ட காலமாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்க நேர்ந்துள்ளது. இந்த வகையில் 2 கைதிகள் 22 வருடங்களாகவும், 3 பேர் 18 வருடங்களாகவும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே 10 அரசியல் கைதிகள் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார்கள். அதேவேளை, 200 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், 300 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் இருக்கின்றார்கள்.

ஒரு சிலருடைய வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகள் நடைபெறாத காரணத்தினால் அடுத்து தங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். தங்களுடைய வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு ஏதேனும் முடிவுகள் தெரிவிக்கப்படுமா அல்லது எதுவுமே தெரியாத நிலையில் கைதிகளுக்குரிய நீதிமன்ற விசாரணைகளின்றி தாங்கள் கைதிகளாக வாழ்நாள் முழுதும் சிறைச்சாலைக்குள்ளேயே கிடந்து மடிய வேண்டியதுதானா என்று அவர்கள் ,ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சிறைச்சாலைகளின் நடைமுறைகள், அங்கு இடம்பெறுகின்ற கெடுபிடிகள், சி;த்திரவதை நடவடிக்கைகள் காரணமாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற தகவலையும் அரசியல் கைதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வெளிமாவட்ட நீதிமன்ற விசாரணைகளின் போது….

படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டுமல்லாமல் வேறு வேறு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகள் கொழும்புக்கு வெளியில் உள்ள உயர் நீதிமன்றங்கள் பலவற்றில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால், அந்தந்த நீதிமன்றங்களின் வழக்குத் தவணைகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கைதிகளை அந்தப் பிரதேசங்களுக்குக் கொண்டு செல்வது வழக்கம்.

இத்தகைய கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு அருகில் உள்ள நீதிமன்றமாக இருந்தால், வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தன்று அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை முடிந்தவுடன் திரும்பவும் அதே சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிடுவார்கள். வெளிமாகாணங்களில் – தூர இடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்படுகின்ற கைதிகள் சில தினங்கள் அந்த நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட சிறைச்சாலைகளில் அல்லது மறியற்சாலைகளில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகள் அங்கு, கொலை, கொள்ளை உட்பட்ட குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களில், அவர்களுடன் ஒன்றாகத் தடுத்து வைக்கப்படுகி;ன்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாங்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என அறிந்ததும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த குற்றவியல் கைதிகள் தங்களை கீழ்த்தரமாக பயங்கரவாதிகளாக நோக்குவதுடன் அவர்களின் காரணமற்ற கோபத்திற்கும் சீற்றத்திற்கும் ஆளாகி துன்புற நேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டிருக்கின்ற குற்றவியல் கைதிகளின் தாக்குதல்களுக்கும் கீழ்த்தரமான ஏச்சுப் பேச்சுக்களுக்கும் அரசியல் கைதிகள் ஆளாக நேரிடுகின்ற போதிலும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் எவரும் கவனம் செலுத்துவதில்லை. அந்த குற்றவியல் கைதிகளுக்கு எதிராக அரசியல் கைதிகள் முறைப்பாடு செய்யும் சந்தர்ப்பங்களில் அந்த குற்றவியல் கைதிகளின் இம்சைகளுக்கு மேலாக சிறைச்சாலை அதிகாரிகளின் கெடுபிடிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடுவதாகவும் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேநிலைமை வெலிக்கடை சிறைச்சாலையிலும் ஏற்பட்டிருக்கின்றது. முன்னர் அரசியல் கைதிகளுக்கென தனியான அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த சிறை அறைகளில் அல்லது சிறை மண்டபங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால், அரசியல் கைதிகள் பல்வேறு சிரமங்களுக்கும் கஸ்டங்களுக்கும் ஆளாகி வருகின்றார்கள்.

அரசியல் கைதிகள் ஒன்றாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றபோது, அவர்கள் காலையில் யோகாசனம் செய்வது தியானங்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது போன்ற பழக்க வழக்கங்களுடன் தங்களுடைய மனதையும் உடலையும் தேற்றிக்கொள்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் குற்றவியல் கைதிகளுடன் இருக்கும்போது அத்தகைய சீரான உடல் உள ஆரோக்கியத்திற்கான செயற்பாடுகளில் ஈடுபட முடியாதிருப்பதாக அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

கவலைகளும் கேள்விகளும்

மாலைதீவு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அங்கு 9 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு, கடந்த 3 வருடங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக எந்தவிதமான வழக்குகளும் இதுவரையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தங்களுக்கு என்ன நடக்கும், தங்களை அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என தெரியாத நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கூறியிருக்கின்றனர்.

குற்றங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால், அதற்கேற்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகள் நடத்தி தண்டனை வழங்க வேண்டும். அல்லது தங்களை விடுதலை செய்ய வேண்டும். எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லாமல் தங்களை சிறைச்சாலையில், ஏன் அரசாங்கம் தடுத்து வைத்து தண்டனை அனுபவிக்கச் செய்திருக்கின்றது, என அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

அதேவேளை, கொழும்பு நகரசபை மண்டபத்தி;ல் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆயினும், இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் தனது வலது கண்ணை இழந்தார்.

இந்தக் கொலை முயற்சி சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டார் என்றும், இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளுக்கு உதவிபுரிந்தார் என்றும் குற்றம் சுமத்தி 2000 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சந்திர ஐயர் ரகுபதி சர்மா என்பவருக்கு எதிரான வழக்கில், அவரை குற்றவாளியாகக் கண்ட நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க 300 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். இவருடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேலாயுதம் வரதராஜா என்ற மற்றுமொருவருக்கு நீதிபதி 290 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியிருந்தார். ஆயினும் அவர்கள் இருவரும் 18 வருடங்கள் விசாரணை காலத்தின்போது அனுபவித்த தடுப்புக்காவல் காலம் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்றம் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் உட்பட இந்த வழக்கில் சம்பந்ப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்ததாக 300 வருட சிறைத் தண்டனை பெற்றுள்ள சந்திர ஐயர் ரகுபதி சர்மா நாடாளுமன்ற உறுப்பி;னர் சிவசக்தி ஆனந்தனிடம் கூறியிருக்கின்றார்.

தன்னுடைய கூற்றுக்கு ஆதாரமாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பற்றிய செய்தி தமிழ்த் தேசிய பத்திரிகைகளில் கடந்த செப்டம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவும், ரகுபதி சர்மா தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நீதி அமைச்சர், ஜனாதிபதி ஆகியோர் உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் தன்னை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருப்பதாகவும் ரகுபதி சர்மா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தன்மீது வழக்கு தாக்கல் செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் உண்மைக்கு முற்றிலும் மாறான தகவலை ஏன் வெளியிட்டார் என்றும் ரகுபதி சர்மா கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அரசும் கூட்டமைப்பும் அரசியல் கைதிகளைப் புறக்கணிக்கின்றனவா?

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்து ஆட்சி பீடமேறிய ஜனாதிபதி மைத்திரிபாக சிறிசேன விடுதலை கோரி அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமப் போராட்டம் நடத்தியபோது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக காலக்கெடு குறித்து 2015 ஆம் ஆண்டு உறுதிமொழி வழங்கியிருந்தார்.

ஆனால் அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி அளித்த உறுதிமொழிக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உத்தரவாதம் வழங்கி, தங்களையும் நம்பச் செய்த எதிரி;க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இதுவரையிலும் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என விரக்தியுடன் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்த ஜனாதிபதி தனது உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டால் கைதிகளுடன் தாங்களும் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சிறைச்சாலைக்கு வருகை தந்து உறுதியளித்த தலைவர் இரா.சம்பந்தன் தங்களைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மட்டுமல்லாமல், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வீதியூடாக மாதம் இருதடவைகள் தவறாமல் நாடாளுமன்றத்திற்குப் போய் வந்த போதிலும் சிறைச்சாலையில் வாடும் தங்களை எவரும் வந்து பார்ப்பதுகூட இல்லை. தங்களை முற்றாக அவர்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கின்றது என்றும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு அவர்கள் தொடர்பான வழக்குகளை ஏற்கனவே உறுதியளித்துள்ளவாறாக, இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை என்ற ரீதியில் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். அல்லது மனிதாபிமான அடிப்படையில் விசாரணை என்ற போர்வையில் பல வருடங்களாகத் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தை தண்டனைக் காலமாகக் கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

நீண்டகால பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளின் விடயம் மனிதாபிமானத்துடன் சம்பந்தப்பட்டது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ள நல்லிணக்கச் செயற்பாட்டுடனும் தொடர்பு கொண்டிருக்கின்றது. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் கொண்டுள்ள பாராமுகமான போக்கைக் கைவிட்டு துரிதமாகச் செயற்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழி செய்ய வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இதுவிடயத்தில் தீவிர கவனம் செலுத்தி, அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வழி செய்ய வேண்டும்.

இந்த காரியங்கள் இந்தத் தைப்பிறப்புடனாவது, நிறைவேறுமா?

-பி.மாணிக்கவாசகம் –

Leave a comment