நீண்டகாலமாகப் புரையோடிய புண்ணாகக் கருதப்படுகின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியதாகவும் சுயாட்சியுடன் கூடியதுமான ஒரு நிரந்தரத் தீர்வு இந்த ஆண்டு காணப்பட வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தைத்திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது
இந்துமா கடலின் முத்தென விளங்கும் இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கும் தைப்பொங்கல் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்வெய்துகின்றேன்.
இன்று, தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் தமிழர் திருநாள், உழவர் பெருநாள் எனப் பெருமைப்படும் தைத்திருநாள் உவகையுடன் கொண்டாடப்படுகின்றது. இப்பூவுலகில் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. அத்தகைய மாற்றங்களுக்கு சூரிய பகவானே காரணியாகின்றார்.
அந்த வகையில் மாறிவரும் மாரி காலத்தில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியின் போது விதைக்கப்படுகின்ற பயிர் வகைகள் வளர்ந்து, முற்றி தைமாத ஆரம்பத்தில் அறுவடைக்குத் தயாராகின்றன. எமது பாவனைக்கான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய உதவிடும் சூரிய பகவானுக்கு நன்றி பாராட்டும் திருநாளாகவே தைப்பொங்கல் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
தைமாதம் பிறக்கின்றது என்றாலே மக்கள் மனங்களில் பெரும் எதிர்பார்ப்புக்களும் துளிர்விடத் தொடங்கி விடுவதுண்டு. எமது மக்களது மனங்களில் நீண்டகால எதிர்பார்ப்பாக இருப்பது, தேசியப்பிரச்சினைக்கான தீர்வேயாகும். அந்த வகையில், நீண்டகாலமாகப் புரையோடிய புண்ணாகக் கருதப்படுகின்ற எமது தேசியப்பிரச்சினைக்கு, புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வைக் காண்பதற்கான முன்முயற்சிகள் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு எமது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய பல அம்சங்களை உள்ளடக்கியதான அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில், தாமதமின்றி அதற்கான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மேலும் சிறந்த சிபார்சுகளையும் உள்ளடக்கி, அனைத்து மக்களதும் இறையாண்மையை மதிக்கக் கூடியதாகவும், அவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு வழியேற்பட வேண்டுமென இந் நன்நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சாந்தி, சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்நாடு சிறந்தோங்க, பிறக்கும் தைத்திங்கள் வழிகோலிட எல்லாம் வல்ல இறையருளை இறைஞ்சுவதுடன், எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.– என்று குறிப்பிட்டுள்ளார்.