ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு

284 0

ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து ஏப்ரல் 20-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7 ஆயிரத்து 700 வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு, செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஒப்பந்த செவிலியர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 200 செவிலியர்கள் மார்ச் மாதத்திற்குள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவர். எஞ்சிய செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவர். ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை 12-ந்தேதி (நேற்று) தெரிவிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக் கப்பட்ட செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்த செவிலியர்களின் ஊதியத்தை ரூ.22 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று மருத்துவ பணிகள் இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் செவிலியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு நியமித்துள்ள குழு செவிலியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு குறித்து ஏப்ரல் 20-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave a comment