தமது பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான தார்மீக உரிமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
“ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைப்பேன் என்றும், ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகளே பதவியில் இருந்தார் என்பதையும், நான்காவது ஆண்டில் அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தினார் என்பதையும் இந்த நேரத்தில் மனதில் கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்திருந்தாலும், நான்கு ஆண்டுகளின் பின்னர் அவரும் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.
தற்போது ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்க முற்படுகிறார்.
தனது தேர்தல் வாக்குறுதிகளை மறந்து இவ்வாறு செயற்படுவது தார்மீக அடிப்படையில் ஜனாதிபதிக்கு பொருத்தமுடையது அல்ல.
இந்தச் சூழலில் சட்டத்தின் பின்னணி நீதிமன்றங்களால் முடிவு செய்யப்படும். அதன் மீது முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறோம். எவ்வாறாயினும், அரசியலமைப்பு நிச்சயமாக அதனை அனுமதிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.