இரு ஆசிரியர் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள்

247 0

400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (12) 130 மாணவர்களே சமூகமளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆசிரியர்கள் மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களுடைய கல்வி விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை என இப்பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர் நேற்று (11) எதிர்ப்பு நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 100ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த ஆசிரியர்கள் இருவரையும் உடனடியாக கல்வி திணைக்களம் இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இவ்விரண்டு ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யும்வரை பாடசாலைக்கு எமது பிள்ளைகளை அனுப்ப போவதில்லை என தெரிவித்ததை தொடர்ந்து இன்று (12) மாணவர்களின் வருகை குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரனிடம் வினவியபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இப்பாடசாலையில் இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையில் அக்கறை காட்டுவதில்லை என அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஊடாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓர்ரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கும் படி கல்வி அதிகாரிகளுக்கு நான் பணித்துள்ளேன். தேர்தல் முடிந்த பின்பு இப்பாடசாலை தொடர்பான முரண்பாடுகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம்.

அதேவேளையில் பாடசாலை நாட்களில் மாணவர்களுடைய கல்வியை பாதிக்கும் அளவிற்கு பெற்றோர்கள் நடந்து கொள்ள கூடாது. பாடசாலையில் இருக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதனால் மாணவர்களை உடனடியாக பாடசாலைக்கு பெற்றோர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment