நீதித்துறையை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக உரிய பதில் அளிக்க நவாஸ் ஷெரீப், மர்யம் நவாசுக்கு நோட்டீஸ் அனுப்ப லாகூர் ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம்செய்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனால் அவர் பிரதமர் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தன் மீது தொடரப்பட்டுள்ள 3 ஊழல் வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியதையும் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை.
தொடர்ந்து நீதித்துறையில் பின்னடைவை சந்தித்து வருகிற நவாஸ் ஷெரீப் நீதித்துறையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.அந்த வகையில், காட் மொமினாபாத் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மர்யம் நவாசும் பேசினர். அப்போது அவர்கள் நீதித்துறையை கடுமையாக சாடியதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மீது லாகூர் ஐகோர்ட்டில், ஆம்னா மாலிக் என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி ஷாகீத் கரீம் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது வழக்குதாரரின் வக்கீல் ஆஜராகி வாதிடுகையில், “இது நீதிமன்ற அவமதிப்பு. நவாஸ் ஷெரீப், மர்யம் நவாஸ் பேச்சுக்களை ஒளிபரப்பு தடை விதிக்க வேண்டும். அரசியல் சாசனப்படி, நீதித்துறைக்கும், ராணுவத்துக்கும் எதிராக யாரும் எதுவும் கூற அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து இது குறித்து பதில் அளிக்க நவாஸ் ஷெரீப், மர்யம் நவாசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ஷாகீத் கரீம் உத்தரவிட்டார்.