பாரீஸ் ஓட்டலில் துப்பாக்கியால் சுட்டு ரூ.35 கோடி நகைகள் கொள்ளை

251 0

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் கோடாரி மற்றும் தூப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் ரூ.35 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு ‘ரேஷா’ உள்ளிட்ட பல நகைக்கடைகளும், ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று திடீரென அங்கு கோடாரி மற்றும் துப்பாக்கியுடன் 3 கொள்ளையர்கள் புகுந்தனர். கண்மூடித்தனமாக சுட்டு கண்ணாடி கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. நகை கடை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் பதுங்கினர். இதற்கிடையே தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்த புராதன மிக்க நகைகளை கொள்ளையடித்தனர். அதன் மதிப்பு ரூ.35 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஓட்டலின் கதவுகளை மூடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 3 கொள்ளையர்களையும் கைது செய்தனர். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படவில்லை.

கொள்ளையடித்த நகைகளை பேக்கில் வைத்து ஜன்னல் வழியாக கொள்ளையர்கள் வெளியே வீசினர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் மற்றும், காரில் தயாராக நின்ற மற்ற கொள்ளையர்கள் அவற்றை எடுத்து சென்று விட்டனர். எனவே அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a comment