ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பலம் நமசிவாயத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அரும்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் அரவிந்தராஜ் (32). இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணி புரிந்தார். தற்போது ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.
தன்னுடன் படித்த டாக்டர்கள் ஒருவரை பார்க்க நேற்று மதியம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் வந்தார். அப்போது ஆஸ்பத்திரி ‘டீன்’ காட்கர் பொன்னம்பலம் நமசிவாயம் ரோந்து வந்தார்.
டாக்டர்கள் அரவிந்தராஜ் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவர் விசாரித்தார். பின்னர் அவரை ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீசில் ஒப்படைத்தார். இந்த விவகாரம் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தெரியவந்தது. சக டாக்டரை ‘டீன்’ அவமானப்படுத்தியதாக கருதினர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ‘டீன்’ பொன்னம்பலம் நமசிவாயத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய டாக்டர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.