இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வழக்கில் லண்டன் கோர்ட் ஏப்ரல் 2-ம் தேதிவரை ஜாமின் அளித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஆறரை லட்சம் பவுண்டுகள் கட்டி ஜாமினில் அவர் வெளியே வந்தார். அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கள்ளத்தனமாக கருப்புப்பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்த தகவல் வெளியான சில நிமிடங்களில் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் விசாரணை நிலையில் மட்டுமே உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவரது வக்கீல் தெரிவித்ததையடுத்து, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதைதொடர்ந்து, இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்தன. சுமார் 150 பக்கங்களை கொண்ட இந்த ஆவணங்களின் அடிப்படையில் விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது விஜய் மல்லையா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இந்த வழக்கில் நேற்றே தீர்ப்பளிக்கப்படலாம். அந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையலாம். விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.
விஜய் மல்லையா சார்பில் நேற்று ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தனது கட்சிக்காரருக்கு எதிராக இந்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்வியை முன்வைத்தனர். இந்தியாவை சேர்ந்த விசாரணை அதிகாரிகளால் இந்திய கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் (சாட்சியியல் சட்டம்) தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கொண்டு இந்தியா – பிரிட்டன் இடையிலான நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது எனவும் அவர்கள் வாதாடினர்.
சில சாட்சிகளின் வாக்குமூலங்களை வைத்து தப்பும் தவறுமாக அரசு அதிகாரிகளால் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களை முன்வைத்து நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கப்பட கூடாது. மேலும், இந்தியாவில் விஜய் மல்லையாவுக்கு எதிரான விசாரணை நடத்திய அதிகாரிகளின் நம்பகத்தன்மை தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு ஏப்ரல் 2-ம் தேதிவரை ஜாமின் அளித்து உத்தரவிட்ட வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட் தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், தேதி குறிப்பிடாமல் வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தார்.
இந்தியாவுக்கு விஜய் மல்லையா அனுப்பி வைக்கப்பட்டால் அவரை அடைத்து வைக்கும் மும்பை ஆர்த்துர் ரோடு மத்திய சிறைச்சாலையில் உள்ள இயற்கையான வெளிச்சம் மற்றும் மருத்துவ வசதி தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இந்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனேகமாக, ஏப்ரல் 2-ம் தேதிக்குள் இந்திய அரசு அளித்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்யும் தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், தனக்கு திருப்தியாக இருந்தால் இதன் அடிப்படையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கலாம். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
எனினும், இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா(62) தரப்பு லண்டன் ஐகோர்ட்டில் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கு முடிந்து. தீர்ப்பு கிடைத்து அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.