ஜெயலலிதா மரணம்: 2 பெட்டிகளில் கொண்டு வந்து ஆவணங்களை தாக்கல் செய்தது அப்பல்லோ நிர்வாகம்

249 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை போக்கி உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், புகாருக்கு உள்ளானவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார்.
அவ்வகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டு என சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து, ஆவணங்களை ஜனவரி 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் கெடு விதித்தது.
இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று விசாரணை ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களும் உள்ளன.
இதற்கிடையே சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததால், அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி உள்ளார். அவர் சசிகலா தரப்பு விளக்கங்களை முன்வைக்க உள்ளார்.

Leave a comment