எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வு மசோதா நிறைவேற்றம்: முதல்வர் – ஸ்டாலின் காரசார விவாதம்

213 0

சட்டசபை உறுப்பினர்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கும் மசோதா இன்று காரசாரமான விவாதங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கான மசோதா நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வரும் நிலையில், ஊதிய உயர்வு மசோதா வாக்கெடுப்புக்கு எடுக்கப்பட்டது.

இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, “கடுமையான நிதி நெருக்கடியின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு தேவையா?. ஊதிய உயர்வு தேவையில்லை என கையெழுத்திட்டுள்ள கடித்தத்தை சபாநாயகரிடம் வழங்க உள்ளோம். போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படும் வரை ஊதிய உயர்வை பெறப்போவது இல்லை. அப்படி ஊதிய உயர்வு அளித்தால் அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம் எம்.எல்.ஏக்களை நாமே காப்பாற்றவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார் என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “அனைத்து எம்.எல்.ஏக்களும் பணக்காரர்கள் இல்லை. ஏற்காடு அதிமுக உறுப்பினர் சித்ரா இன்னும் தொகுப்பு வீட்டில் ஏழ்மையாக இருக்கிறார். எம்.எல்.ஏ.க்களின் கருத்துகள், கோரிக்கைகள் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஊதிய உயர்வு தேவையில்லை என்றால் முதல்வர் பொது நிவாரண நிதியில் ஒப்படைத்து விடுங்கள்” என்று கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் பேச்சை அடுத்து மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.

Leave a comment