சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்காமை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சாட்சியமளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி.அபேகோனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த வழக்கின் சாட்சியாளர்களாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுக்கு பொறுப்பான அதிகாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, இவர்கள் இருவருக்கும் சாட்சியமளிக்க வருமாறு நோட்டீஸ் அனுப்பும் படி அவர்கள் கோரியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
2010 முதல் 2012ம் ஆண்டு வரையான தனது சொத்துக்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.